சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் பயணிகளின் பெரும் வரவேற்பை பெற்ற போதிலும் போகபோக பயணக்கட்டணம் உயர்வு காரணமாக பயணிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரயில் அதிகாரிகள் புதுப்புது திட்டங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அதன் முதல்படியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவுத் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ள பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவு திருவிழா நடத்த உள்ளோம். முதல்கட்டமாக வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழாவை நடத்தவுள்ளோம். வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களில் மாலை 4 முதல் இரவு 9 மணி வரை இந்த உணவுத் திருவிழா நடக்கும். 25 வகையான உணவுகள் கிடைக்கும். விலையும் குறைவாக இருக்கும். மக்களின் வரவேற்பை பொருத்து, மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படும்’ என்று கூறினார்.
மேலும் வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று முதல் விளையாட்டு பூங்கா அமைக்கப்படும் என்று ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவை வரவேற்பு பெறுவதற்காக பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதேபோல் அசோக்நகர், கோயம்பேடு ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களிலும் புதிய சேவைகள் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary : Food festival in Vadapalani Metro Station.