தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க நவம்பர் 3-ஆம் தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் வாகன நெரிசலைக் குறைப்பதற்காக 6 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இவை நவம்பர் 3-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும். அன்றைய தினமும் முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

இதில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். மாதவரம் பணிமனை பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், ஆர்க்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஒசூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதைக் கடந்து செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலையம் அருகே இருந்து, திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகர் பேருந்து பணிமனையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

போக்குவரத்து மாற்றம்: இதேபோல இந்த 3 நாள்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரக் கூடிய அரசுப் பேருந்துகள், வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல் சுங்கச்சாவடி, நெற்குன்றம், மதுரவாயல் மேம்பாலம், இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம் போன்ற இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, அங்கிருந்து கோயம்பேடு பணிமனைக்குள் அனுமதிக்கப்படும்.

இதேபோல தனியார் ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு மார்க்கெட் “உ’ சாலையில் உள்ள நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும். இந்த பேருந்துகள், “ஆ’ சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று, அங்கிருந்து வெளியூர் செல்லலாம். ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் புறவழிச்சாலை, 100 அடி சாலையில் வடபழனி நோக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களுக்கு தடை: நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரையிலும், பின்னர் 7-ஆம் தேதியும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த நாள்களில், பகல் 2 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மார்க்கங்களிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அந்த நேரத்தில் அங்கிருந்து வரும் வாகனங்கள், வண்டலூர் பாலம் வழியாக சென்னை வெளிவட்ட சாலையில் நெமிலிச்சேரி சி.டி.எச். சாலையை அடைந்து, பாடி மேம்பாலம் வழியாக ஜி.என்.டி. சாலை மாதவரம் ரவுண்டானா அடையலாம். திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் நசரத்பேட்டையில் இடதுபுறம் திரும்பி சென்னை வெளிவட்ட சாலை வழியாக சென்னை செல்லலாம். அதேபோல 100 அடி சாலையில் பாடி வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பாலம் சந்திப்பில் சி.டி.எச். சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

கோயம்பேடு: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவங்கரை சந்திப்பு, நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-ஆவது அவென்யூ, 2-ஆவது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் சாலை, மாந்தோப்பு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள தனியார் வாகனங்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நடுவங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13-ஆவது பிரதான சாலை, 2-ஆவது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.

வடபழனி நோக்கிச் செல்லும் தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே. நகர் சந்திப்பு, ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, விநாயகபுரம் வழியாகச் செல்ல வேண்டும். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை வழியாக செங்கல்பட்டு,திருக்கழுகுன்றம் சென்று, அங்கிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *