குரூப் 2 தேர்வு முடிவுகள் முதல் முறையாக 36 நாள்களில் வெளியிடப்பட்டன. இதற்கான அறிவிப்பை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் வெளியிட்டார்.
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2 முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை 4 லட்சத்து 62 ஆயிரத்து 697 பேர் எழுதினர்.
தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்துக்கும் முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது குரூப் 2-க்கான முதனிலைத் தேர்வின் முடிவினை 36 நாட்களில் வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 2 மாத கால அவகாசத்துக்கும் கூடுதலான கால அவகாசத்துடன் அதாவது 69 நாட்கள் இடைவெளியில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-இல் நடத்தப்படுகிறது.
பதிவேற்றம் செய்ய வேண்டும்: முதன்மைத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 194 விண்ணப்பதாரர்கள், தங்களது சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpscexams.net) அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக வரும் 24 முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான கட்டணத்தையும் ஜனவரி 10-ஆம் தேதிக்குள்ளாக தேர்வாணைய இணையதளம் வழியே மட்டும் செலுத்த வேண்டும்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத, விண்ணப்பக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார். நூலகர் தேர்வு தள்ளிவைப்பு: குரூப் 2 முதன்மைத் தேர்வு வரும் பிப்ரவரி 23-இல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேதியில் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட வேண்டிய நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வுக்கான தேதி வேறொரு நாளில் அறிவிக்கப்படும் எனவும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்தார்.