சென்னை உள்பட தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு இன்று முதல் விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, “பெண்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் இன்று முதல் (07.12.2015) தமிழ்நாடு முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உடனடியாக 10 லட்சம் சானிடரி நாப்கின்கள் முதற்கட்டமாக வழங்கப்படுகின்றன.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களுக்கு அரசால் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களிலும், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 199 முகாம்களிலும் விலையில்லாமல் சானிடரி நாப்கின்கள் வழங்கப்பட்டது.
மேலும், 92 நடமாடும் வெள்ள நிவாரண மருத்துவ குழுக்கள் மூலமாகவும் முதற்கட்டமாக 10 லட்சம் சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும். இந்த ஒரு சானிடரி நாப்கின் பாக்கெட்டில் 6 நாப்கின்கள் இருக்கும்.
மேலும், சென்னையைப் போல காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி போன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இதர மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கும் விலையில்லாமல் சானிடரி நாப்கின்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆகவே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் பெண்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் வெள்ள நிவாரண முகாம்கள், நடமாடும் மருத்துவ முகாமிலும் இலவசமாக சானிடரி நாப்கின்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary-free napkin for women in chennai flood affected areas