பாரத பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி தொடங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு அறிவித்து இருந்த நிலையில் நேற்று முதல் சென்னை சென்ட்ரலில் ரெயில் நிலையத்தில் அதிவேக ‘வை-பை’ வசதி தொடங்கப்பட்டுள்ளது.
ரெயில் பயணிகள் ரெயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் இந்த ‘வை-பை’ வசதியை பயன்படுத்தி தங்களது லேப்டாப், ஸ்மார்ட் போன்கள் மூலம் தங்களுக்கு வேண்டியவர்களுடன் தொடர்பில் இருக்கவும் அலுவலகம் சம்பந்தமான தகவல்களை அனுப்பவும் முடியும். இதே போல் புகைப்படங்களை டவுன்லோடு செய்தல், அலுவலக பணிகளை செய்தல் போன்றவற்றுக்கும் வை–பை வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வை–பை வசதி 24 மணி நேரமும் இலவசமாக கிடைக்கும். இந்த சேவையை ரெயில்வேயின் ரெயில்டெல் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ‘வை-பை’ வசதி தொடங்கும் நிகழ்ச்சியில் ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு கலந்து கொண்டு பேசியதாவது: நாட்டில் ரெயில்வே துறை மிகப்பெரிய சேவையாற்றி வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. இந்த துறையை மேலும் மேம்படுத்த ஏராளமான முதலீடுகள் தேவை. அடுத்த 4 ஆண்டுகளில் ரெயில்வே துறையில் 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள், பயணிகளுக்கு தரமான சேவைகள், ரெயில் பெட்டிகள் நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் விரைவு படுத்தப்படும்.
பாரம்பரியமும், கலாசார பெருமையும் மிகுந்த தமிழகத்துக்கு ரெயில்வே துறை தனி கவனம் செலுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ. 2,218 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெறும் ரூ. 828 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இன்று 6 புதிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். மாநில அரசு மற்றும் தனியார்கள் கூட்டுமுயற்சியுடன் தான் ரெயில்வே துறையில் சாதனைகள் படைக்க முடியும். அந்த வகையில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில அரசுகளுடன் பேசப்பட்டுள்ளது. அந்த மாநில அரசுகள் ரெயில்வே துறையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்துள்ளன.
நாட்டின் வடபகுதியையும், தென்பகுதியையும் இணைக்கும் வகையில் காசி – ராமேஸ் வரம் இடையே புதிய ரெயில், திருச்சி–நெல்லை இடையே ஓடும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரசை கன்னியாகுமரி வரை நீட்டிப்பது. கன்னியாகுமரியில் இருந்து வாரம் இருமுறை இயக்கப்படும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலை கூடுதலாக ஓரிரு நாட்கள் இயக்குவது பற்றி ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு ரயில்வே அமைச்சர் பேசினார்.
English Summary: Free Wi-Fi facility in the Chennai Central Railway Station. Minister inaugurated