பபாசி நடத்தும் 42-ஆவது புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிவைக்கிறார்.
இதையடுத்து வரும் ஜன.20-ஆம் தேதி வரை வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும். மொத்தம் 820 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 லட்சம் முதல் 12 லட்சம் தலைப்புகளில் ஒன்றரை கோடி புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன.
ஜன.5-ஆம் தேதி புத்தகக் காட்சி அரங்கில் பிரமாண்டமான தமிழன்னை உருவச்சிலை நிறுவப்படவுள்ளது. இதை அமைச்சர் க. பாண்டியராஜன் திறந்துவைக்கிறார். ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எழுத்தாளர்களும், கலை உலகினரும் கலந்து கொள்கின்றனர். 8-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் வாசித்தேன் யோசித்தேன் என்கின்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
புத்தகக் காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ.100-க்கு பாஸ் வழங்கும் வசதியும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாஸ் மூலம் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தக கண்காட்சி அரங்குக்குள் சென்று வர முடியும்.