டெல்ட்டா பகுதி மக்களிடையே கடந்த சில நாட்களாக கஜா புயல் போலவே இரண்டாவதாக ஒரு புயல் தக்க உள்ளதாக செய்திகள் வாட்சப் மூலம் பரவி வருகிறது. இது குறித்தும், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வானிலை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
”வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, கடலூர் பகுதியை நோக்கி 21-ம் தேதி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்று பலமாக வீசாது, இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால் அதற்கான சூழல்கள் சாதகமாக இருக்கின்றன. அது ஒருவேளை வலுவிழந்த புயலாக இருந்தால்கூட, வியப்படையக்கூடாது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடக்கூடும். ஏனென்றால், வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும். சென்னையில் இன்று முதல் மிதமான மழை ஆங்காங்கே இடைவெளி விட்டு பெய்யக்கூடும். இன்று இரவு முதல் கனமழை பெய்யும். நாளை காலையில் மீண்டும் மழை பெய்யும், இந்த மழை 22-ம் தேதி வரை நீடிக்கும். 23-ம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 850மிமீ மழை சராசரியாகப் பெய்யும், ஆனால், தற்போதுவரை 225 மிமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது. இந்த மழையை சென்னை தவறவிடாது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்கூட ஒருநாள் மழை இருக்கும். நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் வீசப்படும் காற்றை கஜா புயலோடு ஒப்பிட முடியாது. இது கடற்கரைப் பகுதியை கடக்க ஒரு நாள் ஆகும். இது நிலப்பகுதியை அடையும் போது வலுவடையவும் வாய்ப்புள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது உறுதியாகியுள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம். இதனால், 50 முதல் 60 கி.மீ வரை வடதமிழக மாவட்டங்கள், கடலூர், புதுசேரியில் காற்றுவீசக்கூடும்
தமிழகத்துக்கு வடகிழக்குப்பருவமழையின் மூலம் இதுவரை 305மிமீ மழை பதிவாகி இருக்க வேண்டும், ஆனால், இதுவரை 243 மிமீ மழை மட்டுமே கிடைத்திருக்கிறது. அடுத்த 3 நாட்கள் வடதமிழகத்தில் மழை இன்னும் தீவிரமாகி, எதிர்பார்த்த மழை பொழிவு கிடைக்கும். டிசம்பர் மாதம் மீண்டும் எம்ஜேஓ நம்முடைய கடற்பகுதிக்கு வருகிறது. இதனால், தமிழகத்துக்கு கூடுதலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக;; தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் மேலும் ஒரு புயல் தக்க உள்ளதாக வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அப்படி கூறுபவர்களை, இது போன்ற பொய்யான தகவலை கூறாதீர்கள் என்று கூறி, வீண் வதந்திகளை பரவ விடாமல் தடுக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்..