இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கங்கை நதியை புனித நதியாக கருதி வருகின்றனர். கங்கைக்கு செல்லும் ஒவ்வொருவரும் கங்கை நீரை வீட்டுக்கு கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கங்கைக்கு செல்ல முடியாதவர்களுக்கும் கங்கை நீர் வீடு தேடி வரும் நிலை தற்போது உருவாகியுள்ளது. கங்கை நீரை பெற விரும்புபவர்களுக்கு தபால் மூலம் கங்கை நீரை வழங்கும் திட்டம் விரைவில் சாத்தியமாகவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெரும் வலையமைவைக் கொண்டுள்ள அஞ்சலகத்தின் மூலம் கங்கை நீரை தபாலில் பெற முடியுமா என பல்வேறு கோரிக்கைகள் எனக்கு வந்த வண்ணம் உள்ளன. ஹரித்வார், ரிஷிகேஷில் இருந்து தூய்மை யான கங்கை நீரை எடுத்து இ-காமர்ஸ் தளம் மூலம் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அஞ்சல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த கலாச்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்வதாக அஞ்சல் துறையினர் உறுதி தெரிவித்துள்ளனர்.

அஞ்சல் நிலையங்களில் இ-காமர்ஸ் பொருட்களை விற்பனை செய்வதால் பாஜக ஆட்சிக்காலத்தில் பார்சல் வருவாய் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. மொபைல் போன்கள், சேலைகள், நகைகள், துணி வகைகளை ஒரு தபால்காரர் விநியோகிக்கும்போது, கங்கை நீரை ஏன் விநியோகிக்க முடியாது.

இந்திய ஸ்டேட் வங்கியை விட, அஞ்சலகங்களின் கோர் பேங்கிங் வலையமைவு அதிகம். எஸ்பிஐ-யிடம் 1,666 கோர் பேங்கிங் கிளைகள் உள்ளன. ஆனால், 22,137 அஞ்சலகங்களில் கோர் பேங்கிங் வசதி உள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள், நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து தபால்காரர்களுக்கும் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். 2017 மார்ச் மாதத்துக்குள் கிராமப் பகுதியிலுள்ள 1.3 லட்சம் அஞ்சலகங்களின் தபால்காரர்களுக்கும் கையடக்க கருவிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English Summary : Central government new plan to deliver Gangajal to door steps through E-commerce.