குரூப் 1 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கடைசி கட்டத் தேர்வான நேர்முகத் தேர்வு வரும் 21-இல் தொடங்கவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 1-இல் காலியாக இருந்த 85 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 9-இல் வெளியிடப்பட்டது. முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற 176 பேரின் பட்டியல் கடந்த 31-இல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதன்மை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வானது சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 21-ஆம் தேதி முதல் வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேர்முகத்தேர்வுக்கான தகவலை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நாளில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது. நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும், முழுத் தகுதி பெற உறுதி அளிக்கப்பட்டதாகவும் கருத இயலாது.