சென்னை: குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு குரு பரிகார தலங்களில் சிறப்பு யாகங்கள், லட்சார்ச்சனை நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் இந்த சிறப்பு யாகங்களில் பங்கேற்கலாம். குருப் பெயர்ச்சியன்று குரு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பானாது.
வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு வணங்கவேண்டும்.
குருபகவானுக்கு பரிகாரம் செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறும்.
ஆலங்குடி ஆபத்சகாயர் ஆலயத்தில், குருப்பெயர்ச்சிக்கான லட்சார்ச்சனை விழா கடந்த வியாழக்கிழமை தொடங்கி முதல்கட்டமாக அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக அக்டோபர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். இதேபோல குருபகவான் பரிகார தலங்களில் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. உங்களுக்கு அருகில் உள்ள குருபரிகார தலங்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம்.
பாடி திருவாலிதாயம்: சென்னை அருகில் பாடியில் வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். இங்கு குருபகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இவர் சிவனை வணங்கும் விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு
தென் திட்டை ராஜகுரு: தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவனும் இறைவியும் அருள்புரிந்து வருகின்றனர். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குருவித்துறை குரு: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர்.
ஆலங்குடி தட்சிணாமூர்த்தி: நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால், இவரை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை சமர்பித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.
மயிலாடுதுறை மயூரநாதர் – மேதா தட்சிணாமூர்த்தி: இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமுர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோவிலில் தட்சிணாமுர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டமங்கலம் குரு: சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இவரது சன்னதி முன் மண்டபத்தில் 12ராசிக்களின் கட்டம் வடிக்கப்பட்டுள்ளது.
தக்கோலம் குரு: வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் – பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.
வாலாஜாபேட்டை – மேதா தட்சிணாமூர்த்தி: வேலூர்மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆலயத்தில் குருபகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். இவரை வழிபட கல்வி செல்வமும் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சி நாளில் சிறப்பு யாகங்களும் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் குரு, தட்சிணாமூர்த்தி: குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.
ஆழ்வார்திருநகரி: தூத்துக்குடி மாவட்டத்தில் 108 திருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும். பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். இந்த கோவில்கள் மட்டுமல்ல சிவ ஆலயங்களில் நவகிரக குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட நன்மைகள் நடைபெறும்.