நாட்டில் தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதை விரைவில் கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஹால்மார்க் என்பது தங்கத்தின் கலப்படமில்லா தூய்மைத் தன்மையை குறிப்பதற்காக வழங்கப்படும் முத்திரையாகும். நுகர்வோர் அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய தர கட்டுப்பாட்டு அமைப்பானது (பிஐஎஸ்) அந்த முத்திரையை வழங்கும் அதிகார அமைப்பாக உள்ளது. தற்போதைய நிலையில் தங்கநகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவது, விற்பனையாளர்களின் விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது.

உலக தரக் கட்டுப்பாட்டு தினத்தையொட்டி, இந்திய தர கட்டுப்பாட்டு அமைப்பு உலகளாவிய தரக் கட்டுப்பாடு மற்றும் 4-ஆவது தொழிற்புரட்சி என்ற தலைப்பிலான நிகழ்ச்சிக்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பேசுகையில், தங்க நகைகளுக்கான ஹால்மார்க் தர நிர்ணயத்தை இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பானது 14 காரட், 18 காரட், 22 காரட் என 3 நிலைகளாக பிரித்துள்ளது. நாட்டில் தங்க நகை விற்பனை செய்வதற்கு அந்த ஹால்மார்க் முத்திரை பெறுவது விரைவில் கட்டாயமாக்கப்படும்.

நுகர்வோரின் நலன் கருதி இந்த நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது. தங்கத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதில் இந்தியா பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தர நிர்ணயத்துக்கான பணிகளை விரைவுபடுத்துவது சவால் நிறைந்ததாக உள்ளது என்றார்.

எனினும், ஹால்மார்க் முத்திரை பெறுவதை கட்டாயமாக்கும் நடைமுறையை அமல்படுத்தும் தேதி தொடர்பாக அவர் ஏதும் குறிப்பிடவில்லை. இந்நிகழ்ச்சியின்போது, பிஐஎஸ் அமைப்பின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

ஹால்மார்க் முத்திரை வழங்குவதற்கும், அதை மதிப்பீடு செய்வதற்குமாக இந்தியா முழுவதும் 653 மையங்கள் உள்ளன. அதில் அதிகமான மையங்கள் தமிழ்நாட்டிலும், அதற்கு அடுத்தபடியாக கேரளத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *