தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில் கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவுத் திருவிழா தீவுத்திடலில் நடக்கிறது. வரும் 29ம் தேதி முதல் மே மாதம் 14ம் தேதி வரை நடைபெறும் விழாவில் இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:
சென்னை விழாவில் நடைபெற உள்ள கண்காட்சியில் வங்க தேசம், பூடான், ஈரான், நேபாளம், நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கிர்கிஸ்தான், உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாட்டின் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு சார்பில் 70 ஸ்டால்களும் இடம் பெறுகின்றன. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கைவினைப் பொருட்களை 80 அரங்குகளில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் புவியியல் குறியீடு பெற்ற பொருட்களுக்கு முன்னிலைப் படுத்தப்படுகிறது. அதேபோன்று, தமிழ்நாடு சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மருத்துவ பயண உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் 55 சர்வதே பிரதிநிதிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர்.