சென்னை: இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியுள்ளது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்கிறது. காலையில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
எழும்பூர், கிண்டி, வடபழனி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. செங்கல்பட்டிலும் கனமழை பெய்கிறது.
காலையிலேயே கனமழை பெய்வதால் மக்கள் வேக வேகமாக தங்கள் பணிக்கு செல்ல கிளம்பி இருக்கிறார்கள். கனமழையால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வடபழனி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று முழுக்க சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது தொடர்ந்து வலுவடைந்து கொண்டே செல்கிறது.
இதனால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.