கடந்த அக்டோபர் 29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை, மற்றும் அதன் புறநகரில் கடந்த இரண்டு நாட்களுக்கு பெய்து வரும் மழையால் சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னையில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் பாரிமுனை, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், தாம்பரம், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், உள்ளகரம், வேளச்சேரி, கொட்டிவாக்கம், கீழ்க்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் சென்னை சாலைகளில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். சாலைகளில் மழைநீர் வெள்ளமாக தேங்கி நின்றதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பருவ மழைக்கு முன்னரே போதி அளவில் சாலைகள் பழுது நீக்கப்படாததால், பள்ளம் மேடாகக் காட்சியளித்தது. இதனால், ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்யும். குமரி கடல் பகுதியில் கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு கடற்பரப்பில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்ட, சோத்துப்பாறையில் 10 செ.மீ மழையும், காரைக்குடி, கொடைக்கானல், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று ரமணன் தெரிவித்தார்.
English summary-Chennai Meteorological Centre mentioned that heavy rains will commence in next 24 hrs.