பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்த மாணவா்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான உயா்கல்வி வழிகாட்டி மையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மே 5 ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது. இந்த தகவலை மே 1ம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
கற்றல்-கற்பித்தல், பள்ளியின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு, இடைநிற்றல் தொடர்பாக மேலாண்மை குழு (எஸ்எம்சி) கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மே 1ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பள்ளி அமைந்துள்ள ஊராட்சி பகுதியில் பிளஸ் 1, பிளஸ் 2, 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள துணை தேர்வை எழுதி பயனடைய கிராம பஞ்சாயத்து குழு மூலம் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மேல்நிலை பள்ளியிலும் “உயர்கல்வி வழிகாட்டி மையம்” அமைக்கப்பட்டு, +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் மே 5ஆம் தேதி நடைபெற இருப்பதை கிராமசபை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
கிராம சபை கூட்டத்தில் எஸ்எம்சி குழு கூட்டத் தீர்மானங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் கிராம பஞ்சாயத்துக்கும், மக்களும் தங்கள் பள்ளி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும் என தெரிவித்துள்ளார் க.இளம்பகவத்.
பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள உயர்கல்வி வழிகாட்டி மையத்தில் 12ம் வகுப்பு படிப்பை நிறைவு செய்த பிறகு, என்னென்ன படிக்கலாம், எந்தெந்த துறைகளில் சேரலாம், வேலை வாய்ப்புகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.