aadharஇந்தியாவில் வாழும் இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணி கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்து பல வருடங்களாக இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கும் ஆதார் அட்டை உள்பட பல்வேறு வசதிகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்கள் இந்தியக் குடிமக்களாக பதிவு செய்து கொள்வதற்கு இதுவரை கட்டணமாக ரூ.15,000 என்று இருந்த நிலையில் தற்போது இந்த கட்டணம் மிக, மிகக் குறைத்து ரூ.100 என்று நிர்ணயிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டை மட்டுமின்றி பாகிஸ்தான் இந்துகளுக்கு நிரந்தரக் கணக்கு (பான்) எண், வங்கிக் கணக்கு போன்ற சேவைகளைப் பெறவும், சொத்துகளை வாங்கவும் அனுமதியளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, அதன் பின்னர் இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் மொத்த எண்ணிக்கை குறித்து துல்லியமான விவரங்கள் தெரியவில்லை. எனினும், 2 லட்சம் பேர் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்களில் இந்துக்களே அதிகமானவர்கள்.

அண்டை நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வரும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், இந்தியாவில் நீண்டகால விசாக்களைப் பெற்று தங்கியுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள் தொடர்ச்சியாக சந்திக்கும் கஷ்டங்களை கணக்கில் கொண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும், சுயதொழில் புரியும் நோக்கில் ஓட்டுநர் உரிமம், பான் அட்டை போன்ற சேவைகளைப் பெறவும் அனுமதியளிப்பது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட ஓர் மாநிலத்தில் அல்லது யூனியன் பிரதேசங்களில் அகதிகளாகத் தங்கியுள்ள பாகிஸ்தான் இந்துக்கள் மற்ற இடங்களுக்கு சுதந்திரமாக சென்று வர விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில், பாகிஸ்தான் இந்துக்கள் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி போன்றோர் அந்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிப்பர்.

English Summary:Hindus migrated to India from Pakistan Aadhaar card. The Central Government’s decision.