வருமான வரியை நேர்மையாக செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. நாட்டு மக்களில் சிலர் வருமான வரையை நேர்மையாக செலுத்தாமல் உள்ளனர். அதே நேரத்தில் பலர் தங்களின் வருமானத்தை மறைக்காமல் ஒழுங்காக வரி செலுத்துகின்றனர். இவ்வாறு வரி செலுத்துபவர்கள் பலரிடையே ஒரு ஆதங்கம் உள்ளது. அதாவது நாம் ஒழுங்காகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவதால் நமக்கு என்ன கிடைக்கிறது என எண்ணி வருகின்றனர்.
கடந்த ஆண்டு வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். அப்போதுஅவ்ர் ஒழுங்காக வருமான வரி செலுத்துவோருக்கு அவர்கள் நேர்மையை பொறுத்து சலுகைகள் வழங்கலாம் என யோசனை தெரிவித்தார்.
அவருடைய யோசனை தற்போது செயல் வடிவம் பெறுகிறது. வருமான வரியை நேர்மையாக செலுத்துபவர்களை கவுரவிக்க ஒரு திட்டம் அமைக்கப்பட உள்ளது. அந்த திட்டத்தின் படி விமான நிலையம், ரெயில் நிலையம் மற்றும் சுங்கச்சாவடிகளில் இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை விரைவில் மசோதா ஆக்கப்பட்டு நிதி அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து பிரதமர் அலுவலகத்துக்கும் இறுதியாக மத்திய அமைச்சக ஒப்புதலுக்கும் அனுப்பபடும். வருமான வரியை நேர்மையாக செலுத்துவோரை தனியாக அடையாளம் காண சிறப்பு எண் அளிப்பது அல்லது அவர்கள் பான் கார்டில் சிறப்பு குறியீடு செய்வது ஆகிய இரு முறைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.