தற்போதைய இளைஞர்கள் குறைந்த வயதிலேயே நல்ல வேலை பெற்று கைநிறைய சம்பாதிக்கும் நிலை இருப்பதால் அவர்களுக்கும் சொந்த வீடு கனவு ஏற்பட்டுள்ளது. ஐ.டி. உள்பட பல துறைகளில் பணிபுரியும் இளைஞர்களின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளது.

“எஸ்பிஐ ஃபிளக்ஸி பே ஹோம் லோன்” எனும் பெயரில் இளைஞர்களுக்கான புதிய வீட்டு வசதிக் கடன் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாரத ஸ்டெட் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் பி.ரமேஷ் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள, 21 முதல் 45 வயதுடைய இளைஞர்கள் 20 சதவீதம் வரை இந்த புதிய திட்டத்தின் மூலம் அதிக கடனைப் பெறமுடியும்.

பிற வீட்டு வசதிக்கடன் திட்டத்தைப் போன்று பெண்களுக்கு 9.5 சதவீதமும், பிறருக்கு 9.55 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். கடன் பெற்றோர் முதல் ஐந்தாண்டுகளுக்கு வட்டியை மட்டும் செலுத்தினால் போதுமானது. 25 முதல் 30 ஆண்டுகள் வரை கடனை திருப்பிச் செலுத்த முடியும். குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் வீட்டு வசதிக் கடன் வழங்கப்படும்’ என்று கூறினார். இந்த பேட்டியின்போது வங்கியின் சென்னை வட்டப் பொது மேலாளர்கள் ஜி.ரவீந்திரநாத், இந்து சேகர் தன்டூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

English Summary: House Loan to Youth’s SBI’s new scheme.