சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட மக்களின் தேவையை முன்னிட்டு இன்று அதாவது டிசம்பர் 12, சனிக்கிழமை அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் (சிஎஸ்சி) இயங்கும் என பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை தொலைபேசி வட்டம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ” பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் வசதிக்காக, அடையாறு, அம்பத்தூர், ஆவடி, பாரிமுனை, கீரிம்ஸ் சாலை, கே.கே.நகர், துறைமுகம் உள்பட அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் சனிக்கிழமை செயல்படும். இதைத் தொடர்ந்து, அண்ணா சாலை, கீரிம்ஸ் சாலை, ஆர்.கே.நகர், அண்ணா நகர் ஆகிய 4 வாடிக்கையாளர் சேவை மையங்கள் மட்டும் ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தொலைபேசி வட்டத்தில் 284 இணைப்பகங்கள் உள்ளன. இவற்றில் ஓரிரு இணைப்பகங்கள் மட்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இடர்பாடுகள் உள்ளதாகவும் அவற்றை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் சென்னை தொலைபேசி வட்ட தலைமைப் பொது மேலாளர் எஸ். கலாவதி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ள பாதிப்புக்கு பின்னர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் கடந்த ஐந்தே நாட்களில் பிஎஸ்என்எல் சிம்கார்டுகள் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சென்னை மாநகரின் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டதோடு, தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலும் முடங்கின. குறிப்பாக, தனியார் தொலைபேசி நிறுவனங்களின் சேவையும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தவர்கள் தங்களின் உறவினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர். ஆனால், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இணைப்பு மட்டும் பாதிக்கப்படவில்லை. மாநகரில் பிரதானமாக இயங்கும் பிஎஸ்என்எல்-ன் சில இணைப்பகங்களில் வெள்ளம் புகுந்தபோதும், பெரும்பாலான பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி, செல்லிடப்பேசிகள் இயங்கின. பொதுத்துறை நிறுவனங்களை விட, சிறப்பான சேவையை தனியார் நிறுவனங்களால் மட்டுமே வழங்க முடியும் என்று எண்ணியவர்களுக்கு, பேரிடர் காலத்தில் கைகொடுத்தது பிஎஸ்என்எல் மட்டுமே. இதனால் பிஎஸ்என்எல் சிம்கார்டுக்கு தற்போது பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து கருத்து கூறிய சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமைப் பொது மேலாளர் எஸ்.கலாவதி, “தமிழகத்தில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியான சூழலில், உடனடியாக தடையற்ற தொலைத்தொடர்பு சேவை வழங்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதிக அளவில் வெள்ள நீர் புகுந்த இணைப்பகங்கள் தவிர, மீதமுள்ள இணைப்பகங்கள் தடையின்றி இயங்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நெருக்கடியான நேரத்தில், சுமார் 95 சதவீத இணைப்புகள் தடையின்றி இயங்கின. தமிழக அரசு கேட்டுக் கொண்டதின்பேரில், மீட்புப் பணி, அவசர உதவிகளுக்கு வசதியாக கூடுதலாக 30 தரைவழி தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டன. வெள்ள பாதிப்புக்குப் பின்னர், பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்கமாக, நாள் ஒன்றுக்கு 100 முதல் 300 சிம் கார்டுகள் வரை விற்பனை ஆகும். ஆனால், கடந்த 5 நாள்களில் நாளொன்றுக்கு 1,000 சிம் கார்டுகளுக்கும் மேல் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம், கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, 10 சதவீதம் அளவுக்கு வருவாய் அதிகரித்துள்ளது’ என்று கூறியுள்ளார்.English summary-Huge popularity for BSNL sim card after flood