தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனைகளில் பறக்கும் படை ஈடுபட்டு வருகிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிப்பு அடைவதாக பெரும்பாலான புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலைஇல் வாகன சோதனைகளின்போது, பொதுமக்கள் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு குறைவாக வைத்திருந்தால் அவற்றைப் பறிமுதல் செய்யக் கூடாது என்றும் அவர்களை அலைக்கழிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்றும் அதிகாரிகளுக்கு தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்களை நிறுத்தி வைப்பதாகவும் அலைக்கழிப்பதாகவும் கண்காணிப்பு குழுக்கள் மீது ஊடகங்களில் புகார்கள் வெளியாகி வருகின்றன. சோதனைச் சாவடி பணியில் உள்ளவர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வாகனங்களைச் சோதனை செய்வதில்லை என்றும், உரிய ஆவணங்கள் வைத்திருந்தாலும் உடனடியாகப் பணத்தைத் திருப்பியளிக்காமல் அலைக்கழித்து வருவதாகவும் தேர்தல் ஆணையத்துக்கும் பல புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் ரூ.3 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரொக்கம் வைத்திருந்தாலும் போலீஸார், காக்க வைத்து அதன்பின் அனுப்புவதாகப் பொதுமக்கள் தரப்பிலும் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் கவனத்துக்குச் சென்றன.
இந்நிலையில் இதுகுறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: ‘சிறுவியாபாரிகள், வணிகர்கள் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாகக் கொண்டு செல்பவரிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். மேலும் நேற்று பிற்பகல் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது குறித்து, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரி களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், பணம் பறிமுதல் செய்வது தொடர்பாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாகப் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யக்கூடாது. அதற்கு அதிகமாகக் கொண்டு சென்றால், அந்தப் பணம் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதை விசாரித்து உறுதி செய்து உடனடியாகத் திருப்பி அளிக்க வேண்டும். பறிமுதல் செய்து கருவூலத்தில் செலுத்தப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்கள் அளித்தால், 2 நாட்களில் திருப்பியளிக்க வேண்டும். பொதுமக்களை சோதனை என்ற பெயரில் அலைக்கழிக்கவோ, நிறுத்தி வைக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. இவ்வாறு தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை தேர்தல் தொடர்பாக 2 ஆயிரத்து 376 புகார்கள் வந்துள்ளதாகவும், இதில் வாட்ஸ் அப்பில் இருந்து மட்டும் 300 புகார்களைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறிய ராஜேஷ் லக்கானி, தேர்தலுக்கான துணை ராணுவப்படையைப் பொறுத்தவரை, கடந்த தேர்தலை விட அதிகமாகக் கேட்டுள்ளதாகவும் இதுறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.
English Summary: If you go with less money to Rs 50,000 Should not Seize.Election official directive.