அக்டோபர் மாதத்தில் வழக்கத்தைவிட 43 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வழக்கத்தைவிட அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 171 மிமீ மழை பெய்யும் நிலையில், தற்போது 98 மிமீ மட்டுமே பெய்துள்ளது. கடந்த 123 ஆண்டுகளில் இது 9-வது முறையாக குறைவான அளவாக பதிவாகியுள்ளது.
இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிகளவு மழை பெய்துள்ளது. 6 மாவட்டங்களில் இயல்பு நிலையை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும், 17 மாவட்டங்களில் இயல்பைவிட மிகக் குறைவாகவும் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழைக்கான அழுத்தமான காரணிகளான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம் போன்றவை இல்லை. கிழக்கு அலைகள் மட்டுமே நகர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, மழை விட்டு விட்டு பெய்யும் நிலையே இருக்கும்.
தற்போது தமிழக கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 89.6 முதல் 91.4 டிகிரியை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 75.2 முதல் 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கக்கூடும்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் புழல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, திருப்பத்தூரில் தலா 7 செமீ மழை பதிவானது