திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்களின் உணர்ச்சி மிகு கோஷங்கள் இடையே மாலை சரியாக 6 மணிக்கு மஹா தீபம் ஏற்றப்பட்டது
பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது. நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான இத்தலத்தில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அதன்படி கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 10-ம் நாளான வெள்ளியன்று அதிகாலை 3.30 மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவார்ச்சாரியார்கள் மூர்த்தி ஏந்தி வர வேத மந்திரங்கள் முழங்கப் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அதன்தொடர்ச்சியாக வெள்ளியன்று மாலை சரியாக 6.00 மணிக்கு மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபத் தரிசனத்தைக் காண கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, நவசிவாய என்ற கோஷமிட்டபடி திருவண்ணாமலையில் தீப தரிசனத்தைக் கண்டு களித்தனர்.
பொதுவாகவே திருவண்ணாமலை மகா தீபத்தைக் காண 20 லட்சம் பேர் வரை வருவார்கள். ஆனால், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்தாண்டு 4 முதல் 5 லட்சம் வரை பக்தர்கள் குறைந்துள்ளதாக அறநிலைத்துறைர் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.