லண்டன்: விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினர். இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதன்பின் மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த குர்ரன் நிதானமாக ஆடினார். இந்த் ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி 40 ரன்னில் வெளியேறினார். இறுதியில், குர்ரன் 78 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். இறுதியில், இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுல் 19 ரன்னும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் வெளியேறினர்.
இதன்பின் ஜோடி சேர்ந்த புஜாராவும், கோலியும் நிதானமாக ஆடினர். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் கோலி 46 ரன்களில் அவுட்டானார்.
புஜாரா சிறப்பாக ஆடி 132 ரன்கள் சேர்த்து இறுதியில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. கடைசி விக்கெட்டுக்கு புஜாராவும், பும்ராவும் 46 ரன்கள் சேர்த்தனர். இறுதியில், இந்தியா 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 5 விக்கெட்டும், பிராடு 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. குக்கும் ஜென்னிங்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 ஓவர் முடிவில் 6 ரன்கள் எடுத்துள்ளது.