பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் நகரில் உள்ள ஸவன்டெம் என்ற விமான நிலையத்திலும் அடுத்த சில மணி நேரங்களில் அதே நகரத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திலும் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் 21 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருசிலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் பெல்ஜியம் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டரில், “புருசெல்சில் இருந்து வரும் செய்திகள் வேதனை அளிக்கிறது. இந்த தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் பலியானோரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி பெல்ஜியம் செல்ல உள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தாக்குதலில் பெல்ஜியத்தில் உள்ள இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். புருசெல்ஸ் தாக்குதலில் இந்திய தூதரகத்தில் உள்ள இந்தியர்களுக்கும் எவ்வித பாதிப்புன் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் அறிய இந்திய தூதரகத்தின் உதவி எண்கள் +32-26409140, +32-26451850 (PABX) & +32-476748575 (மொபைல்) எப அறிவிக்கப்பட்டுள்ளன.
English summary-Belgium bomb blast – Indian embassy emergency numbers