இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் ரயில்-18 சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
ரயில்-18 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில், நாட்டில் என்ஜினுக்காக தனிப்பெட்டி இல்லாமல் இயங்கக் கூடிய முதல் ரயிலாகும். அதிவேக ரயிலான சதாப்தி விரைவு ரயிலை விட வேகமாக செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில், தில்லி மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மக்களவைத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி இடையே இயக்கப்படவுள்ளது.
வாராணசியில் வரும் 29ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கவுள்ளார். ரயில்-18, சென்னையிலுள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்பட்டது. இதன் மொத்த செலவீன மதிப்பு ரூ.100 கோடி ஆகும். தில்லி-ராஜதானி வழித்தடத்தில் இந்த ரயில் அண்மையில் சோதனை முயற்சியாக இயக்கி பார்க்கப்பட்டது. அப்போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று அந்த ரயில் அனைவரையும் வியப்படைய செய்தது.
வை ஃபை, ஜிபிஎஸ் சாதன வசதி, பயோ கழிவறை, எல்இடி விளக்குகள், செல்லிடப் பேசியை சார்ஜ் செய்யும் வசதி, தட்ப வெப்ப நிலையை கட்டுப்படுத்தும் அமைப்பு உள்ளிட்டவை அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.