மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்று திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை 2018-ஆம் ஆண்டிற்கான, மாற்றுத் திறனாளி இளையோருக்கு சர்வதேச தகவல் தொழில்நுட்ப சவால் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு, இந்தப் போட்டியை, இந்தியா, கொரிய அரசு மற்றும் சர்வதேச மறுவாழ்வு அமைப்புடன் இணைந்து நடத்துகிறது.
இந்தப் போட்டி, மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களின் சவால்களை தாண்டி, திறனை வளர்க்க உதவும் வகையில் அமையும். ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையை அமல்படுத்தும் சட்டத்தைப் பரப்பும் விதமாக இந்நிகழ்ச்சி உள்ளது.
இ-டூல், இ-லைப் மேப் சேலஞ்ச், இ-கிரியேடிவ், இ-கன்டன்ட் ஆகிய பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்படும். இந்தப் போட்டியில் பார்வைத் திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கை, கால் இயக்கத்திறன் குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு கொண்ட 13 வயது முதல் 21 வயது வரை உள்ள சுமார் 100 இளைஞர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இந்தோனேஷியா, சீனா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மங்கோலியா, கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், கொரியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ஐக்கிய அரேபிய நாடுகள், இந்தியா, இங்கிலாந்து ஆகிய 18 நாடுகளிலிருந்து இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். கொரியாவின் சர்வதேச மறுவாழ்வு அமைப்பின் பிரதிநிதிகளும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் போட்டியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவர்சந்த் கெலாட் இன்று (நவம்பர் 9, 2018 ) துவக்கி வைக்கவுள்ளார். வெற்றிப் பெறும் போட்டியாளர்களுக்கு நவம்பர் 11, 2018 அன்று அமைச்சர் விருதுகளை வழங்குவார்.