உலகில் உள்ள அனைத்து இளைஞர்களையும் ஒருங்கிணைத்து அவர்களிடையே பல்வேறு கலாசாரங்கள், தகவல் தொடர்புத் திறன், நிர்வாகத் திறனுடன், தலைமைப்பண்பை மேம்படுத்தும் வகையில், “அடுத்த தலைமுறையினர் உலகத் தலைவர்கள்” என்ற திட்டம் ஒன்றை கடந்த 14 ஆண்டுகளாக ஜப்பான் அரசு செயல்படுத்தி வருகிறது
இந்தத் திட்டத்தின் கீழ் “ஜப்பானிய இளைஞர் நல்லெண்ண கப்பல் சுற்றுப் பயணம்’ என்ற பெயரில், ஜப்பான் மற்றும் பிற நாட்டு இளைஞர்கள் ஒன்றிணைந்து பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் பயணம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் இருந்து புறப்பட்ட சர்வதேச இளைஞர்கள் குழு பயணக் கப்பல் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னைக்கு வரவுள்ளது. அப்போது அவர்களுக்கு பன்னாட்டு கலாசாரங்கள், திறன் மேம்பாடு, கல்வி விவாதம், கருத்தரங்குகள், விளக்கக் காட்சிகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இது குறித்து ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் லதா பிள்ளை, உதவிப்பேராசிரியர் டி.கோபிநாத் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தத் திட்டத்தில் இந்தியா 5 ஆண்டுகளாகப் பங்கேற்று வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான அடுத்த தலைமுறையினர் உலகத் தலைவர்கள் திட்டம் நிகழ்ச்சி கடந்த மாதம் 14-ஆம் தேதி ஜப்பானில் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட 120 ஜப்பானிய இளைஞர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், சிலி, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 120 இளைஞர்கள் என மொத்தம் 240 பங்கேற்பாளர்கள் “நிப்பான் மேரு’ என்ற பெயருடைய கப்பலில் புறப்பட்டனர்.
தற்போது இந்தக் கப்பல் பிப்ரவரி 9ஆம் தேதி, மாலை 3 மணியளவில் சென்னை துறைமுகத்தை வந்தடைகிறது. இக்குழுவினர் அனைவரையும் வரவேற்கும் வகையில் மாலை 5.15 மணி அளவில் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சியை ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.
இதைத் தொடர்ந்து மறுநாள் அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி சர்வதேச இளைஞர் குழுவினர், காலையில் பெசன்ட் நகர் கலாஷேத்ரா கலாசார நிறுவன நிகழ்ச்சியிலும், தொழில்முனைவு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ், இந்திய தொழில்நுட்ப கழகம், அண்ணா பல்கலைக்கழகம், எல்.வி. பிரசாத் திரைப்படம், தொலைக்காட்சி அகாதெமி, எம்ஓபி வைஸ்ணவா பெண்கள் கல்லூரி, தி பான்யன் போன்ற நிறுவனங்களைப் பார்வையிட உள்ளனர்.
பின்னர் பிப்ரவரி 11ஆம் தேதி மத்திய இளைஞர் விவகாரம், விளையாட்டுத் துறை நடத்தும் நிகழ்ச்சியில் மத்திய அரசு செயலர் ராஜீவ் குப்தா, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா பிள்ளை ஆகியோருடன் கலந்துரையாடுகின்றனர். பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு இளைஞர்கள் குழுவினர் கப்பலில் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை புறப்பட்டு செல்கின்றனர். இப்பயணத்திட்டத்தின் முடிவில் அவர்களுக்கு ஐ.நா பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் லதா பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.
English Summary: International youth group to visit Chennai on February 9.