ரெட் அலர்ட் உண்மையா என்ற கேள்விக்கு 5 நாட்களுக்கு முன்னர் வருவது பற்றிய அறிவிப்பு அது, ஆகவே அதற்கு வாய்ப்பு வந்தால் கூறப்படும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் அளித்த பேட்டி வருமாறு:
“தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தமிழக்த்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சில இடங்கலில் கனமழை பெய்துள்ளது.
அதிகப்பட்சமாக கடலூர், காட்டுமன்னார் கோவில் மற்றும் திருச்சி மாவட்டம் குல்லம்பாடியில் 11 செ.மீ.மழை பெய்துள்ளது. அடுத்து வரும் 3 தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அக்.5 குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும், அது 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் அது பின்னர் புயலாக வலுப்பெற்று ஓமன் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
எனவே மீனவர்கள் குமரிக்கடல் பகுதி, தெற்கு கேரளா, லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அக்.5 முதல் 8-ம் தேதிவரை செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
மீனவர்கள் அக்.5 க்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரைப்பொறுத்தவரை இடைவெளிவிட்டு சிலமுறை மழைபெய்யக்கூடும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் 7-ம் தேதி மிக அதிக கனமழை என்று கூறியுள்ளார்களே?
தற்போது கனமழைக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது. நெருக்கத்தில்தான் எதையும் கூற முடியும். ஓரிரு இடங்களில் கனமழைக்குத்தான் வாய்ப்பு உண்டு
அதிக கனமழை என்கிறார்களே? அவ்வாறு வந்தால் சொல்லப்படும்.
7-ம் தேதி மிக கனமழை வாய்ப்பு உண்டா?
அடுத்து வரக்கூடிய 2, 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புண்டு என்று சொல்கிறோம்.
நாளைதான் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதற்கு பிறகு 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், அதன் பின்னர் புயலாக மாறும். கனமழையைத்தான் சொல்கிறார்கள். மிக கன மழைக்கு வாய்ப்பு வந்தால் சொல்லப்படும்.
அது ஐந்து நாட்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். அப்படி வந்தால் அதுப்பற்றி கூறுவோம்.”