தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் இந்த தடையை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழர் அமைப்புகள் போராடி வருகிறது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் சுரேஷ் எடுத்த ஜல்லிக்கட்டு புகைப்படங்களை ‘வீர விளையாட்டு’ என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி ஒன்று நேற்று தொடங்கப்பட்டது.
சென்னை லலித் அகாடமியில் நேற்று காலை சரியாக 10.30 மணிக்கு ஜல்லிக்கட்டு குறித்த இந்த புகைப்பட கண்காட்சியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக வரும் 8ஆம் தேதி வரை தினமும் காலை 10மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த கண்காட்சியை சென்னை மக்கள் மட்டுமின்றி சென்னையின் சுற்றுப்புறத்தில் உள்ள பொதுமக்களும் கண்டுகளிக்குமாறும் இதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
‘விருமாண்டி’ படத்தில் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற காட்சியில் நடித்த கமல்ஹாசன், இந்த கண்காட்சியை திறந்து வைத்து பேசியபோது, “”‘ஜல்லிக்கட்டு’ தொந்தரவு பண்ற விழா என்று பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில் அது உண்மையாக இருக்கலாம். என்ன நடக்கிறது என்று தெரியமால் மிருகங்கள் விலகி ஒடும் போது, கத்தியில் குத்தி கறி பண்ணி சாப்பிடுவது அங்கே வழக்கமான விஷயம். அந்த விளையாட்டை நான் பார்த்திருக்கிறேன். அதில் மிருகங்களுக்கான எந்த ஒரு வாய்ப்பையும் கொடுப்பதே இல்லை.
தமிழ்நாட்டில் மாட்டின் மீது ஆணியை வைத்து கீறிவிட்டால் அவன் வீரன் கிடையாது. இதற்கு பெயர் ‘ஜல்லிக்கட்டு’ என்று வைத்திருக்கிறார்களே தவிர, தமிழில் நிஜப்பெயர் ‘ஏறு தழுவுதல்’ என்பது தான். அதை அணைத்து பிடிக்கணுமே தவிர, கொம்பை பிடித்து வளைப்பதோ, கொலை பண்றதோ இல்லை இந்த விளையாட்டு. அமைதியான காலங்களில், மோதலுக்கு பயந்துவிடக் கூடாது நமது இளைஞர்கள் என்பதற்காக அவர்களுடைய தசைகளை பதம் பார்க்கும் வீர விளையாட்டாக தான் இந்த விளையாட்டு இருந்திருக்கிறது.
ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்பது தான் என்னைப் போன்ற சிலரின் கோரிக்கையும். இந்தக் கண்காட்சிக்கு நான் வந்ததற்குக் காரணம், இவருடைய புகைப்படக்கலை நன்றாக இருக்கிறது. மேலும், இந்த புராதன விஷயம் நவீன மேற்கத்திய சிந்தனைகளால் அடிப்பட்டு போய்விடக் கூடாது என்பற்காகவும் நான் இங்கு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் சுற்றுலாவாசிகளை கவரும் வண்ணம் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும். இந்த வீரமாவது நமக்கு இருந்துவிட்டுப் போகட்டும். இதை ஒரு பண்பாட்டு கலாச்சார விளையாட்டாக நினைத்துக் கொண்டு, இதை தக்கவைக்க வேண்டும் என்பது என்னைப் போன்ற ஏறு தழுவும் தமிழர்களின் வேண்டுகோள்”
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
English summary-Veera Vilayattu exhibition inaugurated by Kamal Haasan