ஒவ்வொரு வருடமும் ஜப்பான் நாட்டின் சார்பில் இந்தியாவுக்கு வரும் சொகுசுக்கப்பலின் மூலம் உலக நாடுகளின் கலாசாரம், நிர்வாகத்திறன், தகவல் தொடர்பு, தலைமைப்பண்பு போன்றவற்றை அறிந்துகொள்ளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு இந்த கப்பல் தற்போது சென்னைக்கு வந்துள்ளது. நேற்று மதியம் 3 மணிக்கு சென்னை துறைமுகத்துக்கு வந்த இந்த கப்பலில் இந்தியா, ஆஸ்திரேலியா, பக்ரைன், சிலி, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, ரஷியா, இலங்கை, தான்சானியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 11 நாடுகளை சேர்ந்த 120 இளைஞர்கள் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த 120 இளைஞர்கள் என மொத்தம் 240 பேர் வந்திருந்தனர்.

சென்னை வந்த 240 இளைஞர்களுக்கும் இந்திய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்குழுவினர் இன்று பெசன்ட்நகர் ‘கலாஷேத்ரா’ மையம், சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், பிரசாத் ஸ்டூடியோ, வைஷ்ணவா பெண்கள் கல்லூரி ஆகிய இடங்களை பார்வையிட உள்ளனர். நாளை ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் பயணத்தை முடித்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கை நோக்கி இந்த கப்பல் செல்லவுள்ளது.

இந்த சொகுசுக் கப்பலில் பயணம் செய்யும் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஸ்வீட்டி பாண்டே என்பவர் தனது அனுபவங்கள் குறித்து கூறியபோது, ‘‘இந்த குழுவில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். நிச்சயம் நமது நாட்டின் கலாசாரத்தை அவர்களுக்கு எடுத்து சொல்வோம். இந்த சுற்றுப்பயணத்தால் உலக நாடுகளுக்கிடையே நல்ல நட்புறவு மேம்படும்’’ என்று கூறினார்.

English Summary: Japanese Cruise ship arrived in Chennai Port with 240 Youngsters. Peoples in this ship studies about world’s Culture, Administration, Technology and Leadership.