பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் உள்பட பல்வேறு சர்வதேச மற்றும் இந்திய அளவிலான விருதுகளை குவித்துள்ள நிலையில் அவருடைய விருதுகளின் எண்ணிக்கையில் மேலும் ஒரு விருது தற்போது அதிகரித்துள்ளது. ஜப்பான் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகிய ஃபுக்குவோகா விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் இசைத்துறையில் அவர் செய்த சாதனைக்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஃபுக்குவோகா பரிசு, ஃபுக்குவோகா என்ற நகரத்தின் சார்பிலும், யோகடோபியா என்ற அமைப்பின் சார்பிலும் ஒவ்வொரு வருடமும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் தனிநபர்கள் அல்லது அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

கல்வித்துறை, கலை அல்லது கலாச்சாரம் ஆகிய 3 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கிராண்ட் ப்ரைஸ் விருதும், ஆசிய கண்டம் சார்ந்த மனித, சமூக அறிவியல் ஆராய்ச்சியில் சாதித்தவர்களுக்கு அகாடமிக் ப்ரைஸ் விருதும், ஆசியாவின் பலவகையான கலை மற்றும் கலாச்சாரத்துக்கு பங்களித்தவர்களுக்கு ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் ப்ரைஸ் விருதும் என
ஃபுக்குவோகா பரிசு மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

இதில், ஏ.ஆர்.ரஹ்மான் கிராண்ட் ப்ரைஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது, “ஃபுக்குவோகா விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கவுரவத்துக்கு நன்றி. உங்கள் அனைவரது அன்பைப் பற்றியும் தெரிந்து கொண்டதில் மிக்க சந்தோஷம். உங்கள் நகரத்துக்கு வரும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

English Summary : Japan’s highest award for AR Rahman.