தமிழர்களின் வாழ்வில் தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலமாக இரண்டறக் கலந்து விட்டவர் கவியரசர் கண்ணதாசன். இசை வாத்தியங்களோடு அவரின் வரிகள் நிகழ்த்தும் அற்புதங்களை ரசிக்காதவர்கள் குறைவு. அவர் எழுதிக் குவித்த காதல் பாடல்களும் தத்துவ பாடல்களும் காலத்தால் அழிக்க முடியாதவை.
அவற்றில் காதலும் தத்துவங்களும் நிரம்பி இருக்கும். அதே போல் அவர் எழுதிய பக்தி பாடல்களில் பக்தி சுவையும், ஆன்மிக அருளும் நிரம்பி இருக்கும். கவிஞரின் ஒவ்வொரு பாடல் வரியிலும் ஒரு கதை இருக்கும். கதைக்குள் ஒரு வாழ்க்கை இருக்கும். வாழ்க்கைக்குள் நாம் இருப்போம். நமக்காக, நம்மைப் பற்றி எழுதப்பட்டவை கண்ணதாசனின் பாடல்கள். பிறப்பு, வளர்ப்பு, சடங்கு, சம்பிரதாயம், காதல், காமம், திருமணம், சிக்கல், பிரச்சினை, வாழ்க்கை, உறவு, பிரிவு, வெறுப்பு, அமைதி, தத்துவம், மரணம் என்று அவர் தொடாத எல்லை, இல்லை!
ஒரு படைப்பு, நம் ஆன்மாவைத் தொடவேண்டும். கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் நம் ஆன்மாவை வருடிவிடுபவை. நம் ஆன்மாவுக்குள் ஓயாது அடித்து அலைக்கழிக்கும் அலையும் அவரே. நம் ஆன்மாவுக்குள் அமைதியை நிலவச்செய்யும் ஆழ்கடலும் அவரே.
தன்னிகரற்ற கண்ணதாசனின் பாடல்களின் சிறப்புகளை “காலங்களில் அவன் வசந்தம்” – நூறாவது நிகழ்ச்சியில் முனைவர் கு.ஞானசம்பந்தம், இசைக்கவி ரமணன் அவர்களுடன் பங்கேற்று பகிர்ந்து கொள்கிறார்.
கண்ணதாசனின் ரசிகர்களுக்கும் இசை ரசிகர்களும் விருந்தாக அமைந்த “காலங்களில் அவன் வசந்தம்” – நூறாவது நிகழ்ச்சி 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.