காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரீனா கடற்கரை, சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் வியாழக்கிழமை அலைமோதியது. போகி பண்டிகையில் தொடங்கி பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாள்கள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் தினத்தில், பொதுமக்கள் தங்களது குடும்பத்தினரோடும், உறவினர்களோடும் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். அதன்படி, நிகழாண்டில் காணும் பொங்கல் விழா வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருவிழாக் கோலம் பூண்ட கடற்கரை: சென்னை மெரீனா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காலை முதலே வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமானோர் கடற்கரைக்கு வரத் தொடங்கினர். பிற்பகல் 3 மணியளவில் கடற்கரையில் மணல் பரப்பே தெரியாத அளவுக்கு மனித தலைகளாகவே காட்சி அளித்தது. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக சிறிய ராட்டினங்களும் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளுடன் மக்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
பெரும்பாலானோர் விளையாட்டு உபகரணங்களை தங்களது வீடுகளில் இருந்தே எடுத்து வந்திருந்தனர். பெண்கள் கபடியும், கண்ணாமூச்சி ஆட்டமும் ஆடி மகிழ்ந்தனர். இதனால் கடற்கரையே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. வீடுகளில் தயாரித்து கொண்டுவந்த உணவு வகைகளை பெரும்பாலானோர் எடுத்து வந்திருந்தனர். அதனை மணல் பரப்பில் அமர்ந்தபடியே அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். சுண்டல், வறுத்த மீன் உள்பட உணவுப் பொருள்களின் விற்பனையும் அதிகரித்திருந்தது. திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தபடியே போலீஸார் தொலைநோக்கி மூலம் கண்காணித்தனர்.
எச்சரிக்கை விடுத்த போலீஸார்: கடலில் குளிப்பதைத் தடுக்கும் வகையில் கடற்கரை பகுதி முழுவதும் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை தாண்டிச் செல்லக் கூடாது என்று போலீஸார் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தனர். குதிரைப்படை வீரர்களும் கண்காணிக்கவும் செய்தனர். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடலில் குளித்த இளைஞர்களை போலீஸார் பிடித்து, எச்சரித்து அனுப்பினர். இதேபோல், எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.