காணும் பொங்கலை ஒட்டி, வண்டலூர் பூங்காவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 43 ஆயிரம் பேர் வந்தனர். தமிழக அரசின் நெகிழி தடையைத் தொடர்ந்து, அதற்கு மாற்றாக காகிதப் பைகள் பூங்கா நிர்வாகத்தால் தரப்பட்டன.
தமிழகத்தில் காணும் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலை ஒட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு காலையில் இருந்தே பார்வையாளர்கள் அதிகளவு வருகை தந்தனர். பார்வையாளர்களின் வருகையை ஒட்டி, பூங்கா நிர்வாகத்தால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஒரு வாரத்தில்…: காணும் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.20 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்ததாக, பூங்கா இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், காணும் பொங்கலான வியாழக்கிழமை மட்டும் 43 ஆயிரத்து 431 பேருக்கு அதிகமானோர் வந்தனர். அதில், பெரியவர்கள் 27 ஆயிரத்து 151 பேரும், சிறியவர்கள் 7 ஆயிரத்து 30 பேரும், ஐந்து வயதுக்கு உட்பட்டோர் 9 ஆயிரத்து 250 பேரும் பங்கேற்றதாக பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.
குழந்தைகளுக்கு அடையாளம்: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த 9 ஆயிரத்துக்கும் அதிகமான ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடையாளமாக கைப் பட்டை பொருத்தப்பட்டது. தமிழக அரசின் நெகிழி பயன்பாட்டு தடை வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் செய்யப்பட்டுள்ளது. தடையை அறியாமல் நெகிழி பைகளைக் கொண்டு வந்த பார்வையாளர்களிடம் நெகிழிக்குப் பதிலாக காகிதப் பைகள் அளிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்ததால், அவர்களின் பாதுகாப்பு கருதி வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை சீருடை பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், 200 தேசிய மாணவர் படை மற்றும் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் பாதுகாப்புப் பணியில் ஒத்துழைப்பு அளித்தனர். பார்வையாளர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.