திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கந்த சஷ்டி நிறைவு விழாவில், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நவம்பர் 8-ஆம் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், தங்கக் கவசமும் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்று வந்தது.
கந்த சஷ்டி நிறைவு நாளான புதன்கிழமை (நவம்பர் 14) காலை 10.30 மணிக்கு மலைக்கோயில் அலுவலகத்தில் இருந்து முருகன் கோயில் பிரசாதக்கடை ஒப்பந்ததாரர் என்.ஹரிஹரமுத்துவின் உபயத்தில் முருகன் சுவாமிக்கு சீர்வரிசை எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர், உற்சவர் முருகன் காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து, முருப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரத்துடன் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது, சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
பிற்பகல் 12.30 மணிக்கு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவ நிறைவு விழாவில் அரக்கோணம் எம்.பி. கோ.அரி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.
விழாவில், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, முன்னாள் நகர் மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், முன்னாள் திருத்தணி ஒன்றியக்குழுத்தலைவர் இ.என்.கண்டிகை எ.ரவி, திருத்தணி வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயசேகர்பாபு, முன்னாள் கவுன்சிலர் கேபிள் எம்.சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைய ஆணையர் செ. சிவாஜி, முருகன் கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் பேஷ்கார்கள் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.