Kapali Movie Vairamuthu'put Fullstop to the controversy  Reportசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படம் தோல்வி படம் என கவிஞர் வைரமுத்து ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைரமுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை. புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக் கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையை புரிந்து கொண்டிருக்கின்றேன் என்பதை விரிவாக சொல்ல முயன்றபோது, ஆண்-பெண் – உறவுகள் -இல்லறம் -அன்பு – காதல் – கண்ணீர்- அரசியல் – கலை – அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் கபாலியின் தோல்வி இவைகளை ஏற்றுக் கொள்ள முடியாத இடத்திலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன். நான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன். கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.

என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை, நான் பெரிது நேசிக்கும் ரஜினியை திட்டமிட்டு குறைத்து சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது. ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம். அதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

இந்த செய்தி வெளியாவதற்கு முன்பே திரு ரஜினி சென்னை வந்த மறுநாள் அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டு சொன்னேன். அவர் எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள் என்று பெருந்தன்மையாக பேசினார். எங்கள் நட்பு பெரியது. தயவு செய்து யாரும் இதை சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வைரமுத்து தன்னுடைய அறிக்கை தெரிவித்து இதுகுறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

English Summary : Kapali Movie Vairamuthu’put Fullstop to the controversy Report