திரும்பும் திசையெல்லாம் காதுகளில் கேட்கத் தொடங்கி விட்டது சுவாமியே சரணம் ஐயப்பா என்கிற சரண கோஷம்.கார்த்திகை மாதம் பக்தி மணக்க பிறந்து விட்டது. குளிர் நிறை கார்த்திகை மாதத்தில் திருவிளக்கு ஒளி வீசும் கார்த்திகை தீபத்திருவிழா நமது அக புற இருள் அகற்றும் ஆன்மீக பெருவிழா.தமிழர்களின் பாரம்பரியத்தில் , இறைவனை ஒளி வடிவில் வணங்கி வருவது மரபு.இந்த கார்த்திகை மாதத்தில் ஏற்றி வழிபடும் தீப வழிபாடு நமது வறுமைகள் நோய் நொடிகள் அனைத்தையும் விலக்கி செல்வ செழிப்பான நல்ல ஆரோக்கியமான வாழ்வை தரும். தீப வழிபாட்டு முறைகள் தீபங்களின் தத்துவங்களை இந்தப் பதிவில் காண்போம்.
தெய்வங்கள் நிறைந்த திருவிளக்கு தத்துவம்: ஒளி தரும் திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி சூட்சுமமாக நிறைந்து இருப்பதால் தீப ஒளி பார்க்கும்போது நமக்குள் அமைதி ஏற்படுகிறது.திருவிளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம்செய்கின்றனர்.திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவார்த்த பொருள் உண்டு. நிலம், நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துபூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றின் குறியீடுகளாக இந்த பொட்டுகள் திகழ்கிறது .
காலை ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தீபம் எற்றுவதற்கு உகந்த நேரம். அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணியளவில் தீப ஒளி ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இந்த நேரத்தில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கி நமது வீட்டில் மகா லட்சுமி வாசம் செய்வாள்.
வாஸ்து கிரக தோஷங்கள் நீங்கிட சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.
எந்த திசை நோக்கி தீபம் ஏற்றலாம்: தீபத்தில் கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்கும். மேலும் பொதுவாழ்வில் நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.
தீபம் இந்த திசையில் ஏற்றக் கூடாது: தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.இருளைப் பழித்துப் பேசுவதை விட அந்த இடத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வை – வெளிச்சம் ஒளி வீசும் என்பார்கள். நாமும் சதா சர்வ காலம் நம் துன்பங்களை துயரங்களை பேசியோ நினைத்தோ கலங்கிக் கொண்டிராமல் இந்த கார்த்திகை மாதம் முதல் தீபம் ஏற்றி நம் துயர் இருள் போக்குவோம். இறையருள் நமக்கு பெரும் ஜோதி வடிவில் நல் வெளிச்சம் தரும்.