தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரித்து, அதனை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. இதனை பரிசீலித்த மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிபுணர் மதிப்பீடு குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலே நடுக்கடலில் பேனா சின்னம் அமைக்கலாம் என மத்திய அரசு தனது முடிவை அறிவித்துள்ளது.
நடுக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் கடந்த 5-ந் தேதி ஒப்புதல் அளித்தது. தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தாலும், I(A) என்று திட்ட அறிக்கையில் குறிப்பிட்ட பகுதியில் ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் எளிதாக சென்று வருவதற்கு இடையூறாக எந்த தூண்களும் அமைக்கப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. மேலும், பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் கட்டுமான பணிகள் ஆமை இனப்பெருக்கும் காலத்தில் நடைபெறக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விதிகளில் திருத்தம்:
பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ள இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கை 2011ன் படி பகுதி IV(A)ன் கீழ் வருகிறது. இந்த பகுதி என்பது வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு புதியதாக எந்த கட்டுமானத்தையும் கட்ட முடியாது. ஆனால், கடந்த 2015ம் ஆண்டு இந்த விதியில் ஒரு சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
மேலே குறிப்பிட்ட IV(A) வரையறுக்கப்பட்ட பகுதிகளில் நினைவிடங்கள்/ நினைவுச்சின்னங்கள் அமைப்பதற்கு விதிவிலக்கு அளித்து திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தத்தின்படியே, மகாராஷ்ட்ராவில் மும்பையில் உள்ள ஆரபிக் கடற்கரையை ஒட்டி சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கப்பட்டது.