பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்கெல்லம் மற்றும் டி காக் இறங்கினர். 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் மெக்கெல்லம் 43 ரன்கள் எடுத்து சுனில் நரைன் பந்தில் கிளீன் போல்டானார். மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். இந்த ஜோடி 64 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 33 பந்துகளில் 31 ரன்களும் ஏபிடி வில்லியர்ஸ் 23 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர். மிக நேர்த்தியாகவும் அதே சமயத்தில் அதிரடியாகவும் விளையடிய மந்தீப் சிங் 18 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக வினய் குமார் மற்றும் ரானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன் மற்றும் சிஏ லைன் களமிறங்கினர். லைன் 5 ரன்களோடு ஆட்டமிழக்க சுனில் நரேன் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். 17 பந்துகளில் அரைசதம் அடித்த சுனில் நரேன் அடுத்த ஓவர்லேயே உமேஷ் யாதவ் வீசிய பந்தில் கிளின் போல்டாகி வெளியேறினார்.
உத்தாப்பாவும் 13 ரன்களுடன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு ரானா மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தி சென்றனர். இந்த பார்ட்னர்ஷிப் 55 ரன்கள் குவித்தது. நிதிஷ் ரானா 25 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். தினேஷ் கார்த்திக் கடைசி வரை அவுட் ஆகாமல் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி வரை நின்ற அவர் 29 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். 18.5 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்கள் அடித்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
English Summary: KKR Beat RCB by 4 Wickets.