சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் முக்கிய திட்டங்களில் ஒன்றான கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்படி வரும் கிருஷ்ணா நதிநீர் நாளை தமிழக எல்லையை வந்தடையும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிருஷ்ணா நதிநீர் ஒப்ப்பந்தத்தின்படி ஜுன் மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற போதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முயற்சியால் தண்ணீரை திறந்துவிட ஆந்திர அரசு சம்மதித்துள்ள்தாக அரசு தெரிவித்துள்ளது.
இத்குறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது: சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதில் ஆந்திரத்திலிருந்து பெறப்படும் கிருஷ்ணா குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கின்ற தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை மாநகருக்கு ஆண்டொன்றுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கடந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்துக்கு 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 20 வரையிலான காலத்தில் 1.738 டி.எம்.சி. அளவுக்கு மட்டுமே தண்ணீர் பெறப்பட்டுள்ளது.
ஐந்தாவது முறை முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்பதற்கு வழி ஏற்பட்டவுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது சென்னை மாநகரின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு ஆந்திர மாநிலத்திலுள்ள கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
முதல்வரின் வேண்டுகோள் காரணமாக, ஜூன் 1ஆம் தேதி மாலையில் இருந்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வரும் வியாழக்கிழமை (ஜூன் 4) வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தில் 96 மில்லியன் கன அடியும், செங்குன்றம் ஏரியில் 996 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 565 மில்லியன் கன அடியும், வீராணம் ஏரியில் 1,270 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் கிருஷ்ணா நதிநீரும் நாளை வரவுள்ளதால் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இவ்வருடம் ஏற்படாது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary : To meet the drinking water needs of Chennai people Krishna river water will be opened and it will reach tomorrow.