மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு நவம்பர் 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 30 இடங்கள் உள்ள இந்தப் படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் அல்லது வாழ்க்கை தொழில் கல்விப் பிரிவில் மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் தொழில் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கு சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசு, அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்கலாம்.
தொடர்புக்கு: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர், தொற்றுநோய் மருத்துவமனை, எண்.187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை -81 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில், நவம்பர் 17 முதல் 28 -ஆம் தேதி வரை வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நவம்பர் 29 -ஆம் தேதி மாலை 4.30 மணி வரை மட்டுமே பெறப்படும். மேலும், தகவல்களுக்கு 044 2591 2686, 2591 2687 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.