சென்னை: தமிழக அரசின் இலவச ‘லேப்டாப்’கள் பொது தேர்வு முடிந்த பின் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளன. கடந்த 2018ல் பிளஸ் 2 முடித்தவர்கள் தற்போது பிளஸ் 2, பிளஸ் 1 படிப்பவர்கள் என மூன்று பிரிவினருக்கும் இந்த ஆண்டு ‘லேப்டாப்’ வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 1,540 கோடி ரூபாய் செலவில் 15.18 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றை வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் துவங்கி வைத்தார். இதில் ஏழு மாணவியருக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு, பள்ளிகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி லேப்டாப் வினியோகம் நேற்று துவங்க இருந்த நிலையில் பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘பொது தேர்வு துவங்கி விட்டதால் தற்போது லேப்டாப் வழங்க வேண்டாம். மாணவரின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் தேர்வு முடிந்த பின் லேப்டாப்களை வினியோகம் செய்யலாம்’ என முதன்மைக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.