கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2014ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை வங்கிகளில் கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் வட்டியின்றி தாங்கள் வாங்கிய கடனை மட்டும் திருப்பி செலுத்துவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கடைசி வாய்ப்பு ஒன்றை அளித்துள்ளது. வட்டியின்றி கடனை மட்டும் செலுத்தும் இந்த அறிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: “கல்விக்கடனுக்கு அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியை வங்கிகள் உடனே அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி பெற தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை வங்கியின் இணையதளங்களில் வெளியிட வேண்டும். இணையதளத்தில் விவரங்கள் வெளியிட்டுள்ளது குறித்து மாணவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கூறியுள்ளது.

இதனை ஏற்று அனைத்து வங்கிகளும் 2009 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2014 மார்ச் 31ஆம் தேதி வரை வங்கிக்கடன் பெற்ற மாணவர்களுக்கு வட்டி தள்ளுபடி அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி பெற மாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. மாணவர்களே வங்கிகளை அணுகி வட்டி தள்ளுபடியைப் பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கல்விக்கடன் ஆலோசனைக் குழு அமைப்பாளர் பிரைம் பாயின்ட் சீனிவாசன் கூறுகையில், வட்டி தள்ளுபடி பெற வங்கியில் மனு கொடுக்க வேண்டும். வட்டி தள்ளுபடி தர மறுக்கும் வங்கிகள் மீது சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவரிடம் புகார் செய்யலாம். புகாரின் பிரதியை இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் அனுப்பலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Bank announces last chance for students to pay for their student loan without any interest.