தற்போதைய விஞ்ஞான மாற்றம் கண்ட காலங்களில் இமெயில், லைவ் சாட்டிங் ஆகியவை வந்த பிறகு கடிதம் எழுதம் பழக்கமே பலருக்கு மறந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் தற்போது கடிதத்திற்கு பதில் இமெயில்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடிதம் போல் இல்லாமல் இமெயில் நாம் கூறவிரும்பும் செய்தியை அடுத்த விநாடியே உரியவரிடம் சேர்த்துவிடுவதால் கடிதம் வழக்கம் போய் இமெயில் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இருப்பினும் கடிதம் எழுதும் வழக்கம் நம் நடைமுறையை விட்டு சென்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்திய அஞ்சல் துறை பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டிகளை அவ்வபோது நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் நடைபெற்ற கடிதப் போட்டியில் சுமார் 20 ஆயிரம் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில், அண்ணா சாலை, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, வேலூர், சென்னை வடக்கு, தெற்கு உள்ளிட்ட 12 கோட்டங்களில் நடைபெற்ற இந்தக் கடிதப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை, 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, இரண்டு பிரிவுகளில் தனித் தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.
“எனது விடுமுறையை எப்படி கழிப்பேன்’, “எனது பள்ளியில் ஒரு நாள்’, “எனக்குப் பிடித்தமான புத்தகம்’ ஆகியவற்றை மையக் கருவாகக் கொண்டு கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது. சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில், சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில், புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறியதாவது: தேசிய அளவிலான கடிதப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் தாத்தா, பாட்டிகளுக்கு, அவர்கள் எழுதிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும். ஏற்கெனவே மாணவர்கள் தங்களின் தாத்தா, பாட்டிகளின் முகவரிகளையும் சேர்த்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தி இருந்தோம். ஒவ்வொரு அஞ்சல் பிரிவிலும், தேர்வு செய்யப்படும் முதல் 3 பேரின் கடிதங்கள் மாநில அளவிலும், பின்னர், தேசிய அளவிலும் மதிப்பாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று கூறினார்.
English Summary:India post has conducted letter writing competition for school students,20,000 students participated.