மாணவ, மாணவிகளின் எழுத்து திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அஞ்சல் துறையின் சார்பில் கடிதப்போட்டி நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த 44ஆண்டுகளாக இந்த போட்டி நடைபெற்று வரும் நிலையில் 45வது உலக அஞ்சல் கடித போட்டி வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இந்த கடிதப் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அஞ்சல் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலக்சாண்டர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது, ”மாணவர்களின் எழுதும் திறனை ஊக்குவிக்கும் வகையில் உலக அஞ்சல் கடிதப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முறைக்கான கடிதப்போட்டி வரும் ஜனவரி 3-ம் தேதி நடக்கவுள்ளது. இதில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்.
பங்கேற்க விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பம், 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் உள்ளிட்டவற்றை உதவி இயக்குனர், போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் அலுவலகம், சென்னை நகர மண்டலம், சென்னை – 600 002 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த விண்ணப்பத்தை வரும் 21-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சென்னையில் இந்தப் போட்டி, மேற்கு மாம்பலம் அஞ்சுகம் மேல்நிலைப்பள்ளியில் நடக்கவுள்ளது”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Letter writing competition for students-India post