தென் மாவட்டங்களில் மட்டும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலையால், தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும், தெற்கு உள் மாவட்டங்களில், பல இடங்களில், ஒரு வாரமாக மழை பெய்தது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, கன்னியாகுமரி மற்றும் மதுரை சிட்டாம்பட்டியில், 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.இந்நிலையில், இன்றும், நாளையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லட்சத்தீவு பகுதியிலும், இந்திய பெருங்கடலில், கன்னியாகுமரிக்கு தென்மேற்கிலும், காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளதால், தென் மாவட்ட கடற்கரை பகுதிகளில், பலத்த காற்று வீசும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.பருவமழை எப்படி?தற்போது, கோடைகாலம் நிலவும் நிலையில், ஜூன் முதல் தென் மேற்கு பருவமழை துவங்கும். 2017க்கு முன், மூன்று ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்தது. 2017ல், இயல்பான அளவில், 80 சதவீதம் பெய்தது.இந்நிலையில், வரும் ஆண்டில், பருவமழை எப்படி இருக்கும் என, முதற்கட்ட நீண்ட கால கணிப்பு அறிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிடுகிறது. அதில், இந்த ஆண்டு தென்மேற்கு மழை எப்போது துவங்கும்; எவ்வளவு பெய்யும் என்பது போன்ற, விபரங்கள் வெளியிடப்பட உள்ளன.

English Summary: Light Rainfall in Southern Districts.