15APRSSY01--Loo_TH_2375361fஉலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெருமையை பெற்றுள்ள சென்னை மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை மக்களுக்கு செலவில்லாமல் உள்ள ஒரே பொழுதுபோக்கு இடம் மெரினாதான். எனவே சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த மெரினா கடற்கரையின் அழகை மேலும் மெருகூட்ட மரங்கள் நடுதல், அலங்கார மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற பணிகளில் சென்னை மாநகராட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் திட்டத்தின் ஒரு கட்டமாகவும், சாந்தோம் பகுதியில் குறுகலான காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் பஸ்நிலையம் வரையில் 2.55 கி.மீட்டர் தொலைவிலான லூப் சாலையை ரூ.35 கோடி மதிப்பீட்டில் 18.2 மீட்டர் அகலத்தில் மேம்படுத்த கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. இந்த பணிக்கு இடையில் ஒருசில தடங்கல்கள், நீதிமன்ற வழக்குகள் வந்ததால் பணி தாமதப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து தடைகளும் விலகியுள்ள நிலையில் மீண்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான கிழக்கு பகுதியில் பணிகள் நிறைவடைந்து, அப்பகுதியில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. பின்னர் மேற்கு பகுதியில் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பணிகள் இறுதிக்கட்டதை நெருங்கி உள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழக கடலோர ஒழுங்குமுறை ஆணையம், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, 18.2 மீட்டர் அகலத்தில் லூப் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 15.2 மீட்டர் போக்குவரத்துகாகவும், 3 மீட்டர் நடைபாதைக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

லூப் சாலையின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் தலா 50 மீட்டர் அளவுக்கு கான்கீரிட் சாலை அமைக்கும் பணி மட்டும் மிச்சம் உள்ளது. விரைவில் அப்பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதன்பின்னர் சாலையின் நடுவில் தடுப்புவேலிகள் அமைத்தல், வேகத்தடைகள் அமைத்தல், 110 எண்ணிக்கையில் எல்.இ.டி. விளக்குகள் அமைத்தல், போக்குவரத்து வழிகாட்டி அறிவிப்பு பலகைகள் பொருத்துதல் போன்ற பணிகள் நடைபெறும். அக்டோபர் மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு லூப் சாலையை அர்ப்பணிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

English Summary : Lighthouse-pattinappakkam loop road. Arranged to open in October