வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 6-ம் தேதி வளிமண்டலத்தில் காற்றுசுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால் 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு 9-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மத்திய வங்கக்கடல் நோக்கி வடக்கு திசையில் நகரக்கூடும். இதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு உள்ளதா என்பதுகுறித்து வரும் நாட்களில் தெரிவிக்கப்படும். தற்போது தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக 4, 5 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 6, 7 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.