நாளை நிகழும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் 11 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நாளை (08.11.2022) மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து திருப்பதி தேவஸ்தான கோயில்களும் நாளை காலை 8.30 மணிக்கு மூடப்பட்டு, இரவு 7.30 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
இதனால் அந்த நேரத்துக்கான கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள திருப்பதி தேவஸ்தானம், “தரிசன டிக்கெட்டுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவைகள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கான தரிசனம், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம் போன்ற அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு கோயில் சுத்தம் செய்யப்படும். அதற்கு பின்பே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என குறிப்பிட்டுள்ளது.