மதுரை-சென்னை இடையே அதி நவீன ரயிலான தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்த அதி நவீன ரயில் சென்னை-மதுரை இடையே 6 மணி 30 நிமிஷத்தில் சென்றடையும்.
பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை வருகை தருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரயில் தொடர்பை ஏற்படுத்தும்வகையில், ரூ.208 கோடியில் புதிய திட்டத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதைத்தொடர்ந்து, புதிய பாம்பன் பால கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, மதுரை-சென்னை இடையே அதி நவீன தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் முதல் சேவையாக மதுரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூரை இரவு 9.15 மணிக்கு வந்தடையும்.
வழக்கமான சேவை தொடங்கிய பிறகு, இந்த ரயில் சென்னை-மதுரை இடையே 496 கி.மீ. தூரத்தை 6 மணி நேரம் மற்றும் 30 நிமிஷத்தில் அடைந்துவிடும்.
ஜி.பி.எஸ். அடிப்படையிலான பயணிகள் தகவல் அறியும் வசதி, எல்.ஈ.டி. விளக்குகள், ரயில் பெட்டியின் உள்புறமும் வெளிப்புறமும் தானியங்கி கதவுகள் வசதி, செல்லிடப்பேசி சார்ஜ் செய்யும் வசதி, ரயில் பெட்டிகளின் உள்புறம் மற்றும் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா, பயோ கழிவறைகள் போன்ற பல்வேறு வசதிகள் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன. இந்த ரயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாள்கள் இயக்கப்படும்.
சென்னை – மதுரை: சென்னையில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 10.25 மணிக்கு திருச்சியை அடையும். அங்கிருந்து புறப்பட்டு முற்பகல் 11.40 மணிக்கு கொடைரோடு அடையும். அங்கிருந்து புறப்பட்டு மதுரையை நண்பகல் 12.30 மணிக்கு சென்றடையும்.
மதுரை – சென்னை: மறுமார்க்கமாக மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கொடைரோடுக்கு பிற்பகல் 3.30 மணிக்குச் சென்று அங்கிருந்து புறப்பட்டு, மாலை 4.52 மணிக்கு திருச்சியை சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயிலுக்கான வழக்கமான முன்பதிவு மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
கட்டணம்: சென்னையிலிருந்து மதுரை வரை சேர் கார் கட்டணம் ரூ.1,035 ஆகவும், எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு கட்டணம் 2,110 ஆகவும் இருக்கும். மதுரையில் இருந்து சென்னைக்கு சேர் கார் கட்டணம் ரூ.1,195 ஆகவும், எக்ஸிக்யூட்டிவ் கட்டணம் ரூ.2,295 ஆக இருக்கும்.
சென்னையில் இருந்து திருச்சி வரை சேர் கார் கட்டணம் ரூ.830 ஆகவும், எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ.1,655 ஆகவும் இருக்கும். திருச்சியில் இருந்து சென்னை வரை சேர் கார் கட்டணமாக ரூ.990, எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு கட்டணமாக ரூ.1,840 ஆகவும் இருக்கும் என்று ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.